அருணகிரியும் அகச்சான்றுகளும் பேராசிரியர் சு.பசுபதி 28-02-15
1. அறிமுகம் அருணகிரிநாதரின் வாழ்க்கைச் சம்பவங்களைப் பொதுவாக மூன்று கோணங்களில் அணுகலாம் : அவை 1) செவிவழிக் கதைகள், அவற்றைக் கேட்ட முருகதாச சுவாமிகள் போன்ற பலரின் பிற்கால எழுத்துகள் 2) அகச்சான்றுகள் 3) கோவில் கல்வெட்டுகள், சாஸனங்கள், வடமொழி நூல்கள் ஆகியவற்றின் துணையுடன் செய்யும் சரித்திர ஆராய்ச்சி.
அகச்சான்றுகள் மூலம் அருணகிரியின் சில வரலாற்றுக் குறிப்புகளை ஆய்வதே இக்கட்டுரையின் மைய நோக்கம். இதற்கு ஓர் அடிப்படைத் தற்கோள் ( assumption ) அவசியமாகிறது. அருணகிரியின் பாடல்கள் என்று அச்சில் உள்ள எல்லாவற்றையும் அவருடைய வாக்கு என்றே கருத வேண்டியிருக்கிறது. சில முக்கியமான வாழ்க்கைக் குறிப்புகளை மட்டும் இப்போது அகச்சான்றுகள் ஊடாகப் பார்ப்போம்.
2. காலம்
அருணகிரிநாதரின் காலம் பற்றிப் பல தமிழ் அறிஞர்கள், சரித்திர ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்திருக்கின்றனர். அவர்கள் புதைபொருள் ஆராய்ச்சி இலாகாவைச் சேர்ந்த டி.ஏ.கோபிநாத ராவ், ”சாஸனத் தமிழ்க்கவி சரிதம்” எழுதிய மகா வித்துவான் மு. இராகவ ஐயங்கார், சரித்திர ஆசிரியர் சி.வி.நாராயண ஐயர், சுவாமி அண்வானந்தா ஆகியோர்.
இரண்டு திருப்புகழ்களில் ” சித்தர் விஞ்சையர் மாகர் சபாசென” ( பச்சையொண்கிரி ) என்றும், “ சுராதிபதி, மால், அயனு மாலொடு சலாமிடும் பெருமான்” ( அவாமரு ) என்றும் பாடுகிறார் அருணகிரி . சபாஷ், சலாம் என்ற ஹிந்துஸ்தானிச் சொற்களால் அவர் காலம் மகமதியர் ஆட்சிக் காலம் என்று தெரிகிறது.
“ தலைவலை யத்து” என்ற திருப்புகழில் வரும் “காளப் புலவர்” என்ற சொற்றொடர் காளமேகப் புலவரின் காலத்துக்கு அண்மையில் தான் அருணகிரியும் வாழ்ந்திருக்கிறார் என்று தெரிகிறது.
மேலும், “ உதய தாம மார்பான பிரபுட தேவ மாராஜன் // உளமுமாட வாழ் தேவர் பெருமாளே” ( அதல சேடனாராட ) என்கிறார்.
இந்த அகச் சான்றுகள், சம்பந்தாண்டான், வில்லிபுத்தூரார் ஆகியவர்களுக்கும் அருணகிரிக்கும் உள்ள தொடர்பு பற்றிய செவிவழிச் செய்திகள் மூலமொரு காலக் கணிப்பு, அருணகிரிநாதர் வம்சாவளியை விவரிக்கும் ”சாளுவ அப்யுதயம்” போன்ற சில வடமொழி நூல்கள், விஜய நகர அரசினர் வரலாறு இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, அருணகிரியால் போற்றப் பட்ட அரசர் கி.பி.1422முதல் 1446வரை விஜயநகரை ஆண்ட இரண்டாம் பிரபுட தேவராயர் என்று ஆய்வாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதனால் இந்திய அரசாங்கம் 1975-ஐ அருணகிரியின் 6 -ஆவது நூற்றாண்டுவிழா என்று அறிவித்து, ஒரு தபால் தலையை வெளியிட்டது என்பது குறிப்பிடத் தக்கது. அதனால் அருணகிரிநாதரின் காலம் கி.பி.15-ஆம் நூற்றாண்டு என்று கொள்ளலாம்.
3. திருப்புகழ்
செவிவழி வரலாற்றின்படி அருணகிரி 16,000பாடல்கள் பாடினார் என்பர். இதற்குத் திருப்புகழில் அகச்சான்றுகள் இல்லை. வடக்குப்பட்டி சுப்பிரமணிய பிள்ளை அவர்களும், அவர் புதல்வர் தணிகைமணி செங்கல்வராய பிள்ளை அவர்களும் தேடிக் கண்டுபிடித்த திருப்புகழ்கள் 1320ஆகும். ஆனால் 16000என்ற கணக்கிற்கு ஆதாரமாய்ச் சில விஷயங்களைக் குறிப்பிடலாம்.
“ எம் அருணகிரி நாதர் ஓது பதினாறாயிரம் திருப்புகழ் அமுதுமே” என்கிறது விரிஞ்சைப் பிள்ளைத் தமிழ். இதுபோலவே, தணிகை உலாவும், "அருணகிரி நாத னறைந்தபதி னாறா // யிர கவிதை யென்றுலகில் யாரும் -உரை புகலும் தெய்வத் திருப்புகழ்" - என்று 16000கணக்கைச் சொல்கிறது.
மேலும், சம்பந்தர் 16000பதிகங்கள் பாடினார் என்ற வரலாறும், அருணகிரி தன் ஞான குருவாய், முருகனின் அவதாரமாய்க் கருதிய சம்பந்தர் போலவே பாட விரும்பினார் என்ற அகச்சான்றுகளும் இது உண்மையாய் இருக்க வாய்ப்பு அதிகம் என்று நம்பவைக்கிறது. “புகலியில்வித் தகர்போல// அமிர்தகவித் தொடைபாட// அடிமைதனக் கருள்வாயே “ ( புமியதனில்) என்ற வரிகள் குறிப்பிடத் தக்கவை.
4. மனைவி, மக்கள், குலம்
"மனையவள் நகைக்க ஊரி னனைவரும் நகைக்க லோக// மகளிரு நகைக்க தாதை தமரோடும் // மனமது சலிப்ப நாயன் உளமது சலிப்ப", ( மனையவள் ) "மாத்திரை யாகிலும் நாத்தவறாளுடன் //வாழ்க்கையை நீடென மதியாமல்... உழல் வேனோ, ( மாத்திரை ), ” 'மனைமக்கள் சுற்றம் எனும் மாயா //வலையைக் கடக்க அறியாதே... // வினையிற் செருக்கி அடிநாயேன்// விழலுக் கிறைத்து விடலாமோ “ ( மனைமக்கள் )
என்ற மூன்று அகச்சான்றுகளாலும், “ சாளுவ அப்யுதயம்” போன்ற நூல்களில் உள்ள விவரங்களாலும் அருணகிரி மனைவி, மக்களோடு வாழ்ந்திருந்தார் என்றும், செவிவழி வரலாறு அவர் பிறப்பைப் பற்றிச் சொல்லும் பலவிநோதமான செய்திகள் மெய்யல்ல என்றும் முடிவு செய்யத் தோன்றுகிறது.
இதுபோலவே, ” விடக்கு அன்பாய் நுகர் பாழனை' ( அனிச்சம்) [விடக்கு --மாமிசம்] என்று தன்னை நொந்துகொள்ளும் அருணகிரி, 'அஜவு அநியாயஞ்செய் வேதி யரே!' (கந்தர் அந்தாதி -31) - (ஜீவகாருண்யம் இல்லாமல் ஆட்டை வதைத்து யாகஞ் செய்கின்ற மறையோரே") - என்று வேதியரையுங் கண்டிக்கின்றார். இதனால் இவர் குலம் என்ன என்று சொல்லமுடியவில்லை என்கிறார் தணிகைமணி.
இவர் குடும்பத்தின் தொன்றுதொட்ட வழக்கப்படி, முருகனே இவருடைய குலதெய்வம். இது "பழைய நினது வழியடிமை" (அகரமுதலென). ”என்றனை வழிவழி யன்புசெய் தொண்டு கொண்டருள் பெருமாளே' (கரதல), 'முடியவழி வழியடிமை எனும் உரிமை' (சீர்பாத வகுப்பு). போன்ற அகச்சான்றுகளால் தெரிகிறது .
5. கல்வி
இவர் வடமொழியிலும், தமிழிலும் மிகுந்த கல்வி அறிவு உள்ளவர் என்பது அகச் சான்றுகளால் மிகத் தெளிவாகத் தெரிகிறது. இராமாயணம், மகாபாரதம், பாகவதம், புராணங்கள் போன்ற நூல்களில் உள்ள சில அரிய விஷயங்களை இவர் அநாயாசமாய்த் தன் பாடல்களில் உள்ளிடுவது நமக்குப் பிரமிப்பைத் தருகிறது. உதாரணமாக, ” பாதி வாலிபி டித்திட மற்றொரு// பாதி தேவர்பி டித்திட லக்ஷுமி// பாரி சாதமு தற்பல சித்திகள் ...... வருமாறு// கீர வாரிதி யைக்கடை வித்த ” ( ஈரமோடு ) என்று வாலி பாற்கடலைக் கடைய வாசுகியைப் பிடித்து இழுத்து உதவியதைக் குறிப்பிடுகிறார்!
தமிழில் தேவாரம், திருமந்திரம் திருமுருகாற்றுப்படை, திருக்குறள் போன்றவற்றில் நல்ல பழக்கமும், காரிகை, உலா, ஏசல், கலம்பகம், கோவை சிந்து, தூது, பரணி, மடல், மாலை எனப்படும் நூல்வகைகளை அறிந்தும், காம சாஸ்திர நூல்களையும் அறிந்தவர் என்பதும் பல அகச்சான்றுகளால் தெரிகிறது.
“ 'தலைநாளிற் பதமேத்தி அன்புற //உபதேசப் பொருளூட்டி . . . அண்டர்கள் அறியா முத்தமிழூட்டி ' ( தலைநாளிற்) என்று தன் முத்தமிழ்ப் புலமையை வெளிபடுத்துகிறார். கருவிலே திருவுடையவராய் இருந்தும், யாப்பிலக்கணத்தில் வல்லவராய் இருந்திருக்கிறார் என்பதில் எள்ளளவும் ஐயம் தராதபடி, புதியதொரு கவிதைப் பாவகையைச் சிருஷ்டித்து நமக்கு அருளியிருக்கிறார்.
6. மற்ற வாழ்க்கைச் சம்பவங்கள்
இவருடைய வாழ்க்கையில் நடந்ததாகச் சொல்லப்படும் பல சம்பவங்களுக்குச் சான்றுகளாகப் பல குறிப்புகள் இவர் பாடல்களில் காணப்படுகின்றன. எடுத்துக் காட்டுகள்:
பரத்தையரிடம் மோகம், அதன் பொருட்டுச் செல்வர்களைப் புகழ்ந்து பொருள் பெறல், அப்பொருள்களை வேசியருக்கு அளித்தல், வறுமை, பிணிகள் வாட்டல், ஒரு பெரியோர் அவர் முன்வந்து உபதேசித்தல் [ ”பெரிய குணதரர் உரை செய்த மொழிவகை” ( கமல குமிளித)], அவ்வுபதேசத்தைப் பின்பற்றாமல் இருத்தல், உயிரை மாய்க்க எண்ணல், முருகன் அவரைத் தடுத்து அருளல் [ “ அகமதை எடுத்த சேமம் இதுவோஎன் றடியனுநினைத்து நாளும், உடலுயிர் விடுத்த போதும் அணுகி” ( மனையவள் )], மயில்மீது முருகனின் நடனக் காட்சி காணல் [ ' மயிலேறி .. வரும்...இருமலர் சரணமும் மறவேனே' ( குரம்பை )], ஜெபமாலை பெறல் [ ‘ஜெபமாலை தந்த சற்குரு நாதா’ ( அபகார நிந்தை)], ‘சும்மா இரு, சொல்லற’ என்னும் மௌனோபதேசம் பெறல் [ “முருகன் சும்மா இரு சொல்லற என்றலுமே அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே’ -கந். அநு. 12], வள்ளியம்மையிடம் ஸ்பரிச தீக்ஷை பெறல் [ ’கடையேன் இருவினை நோய்மலம் மாண்டிட தீண்டிய ஒண் சுகமோகினி வளி நாயகி’ (தமிழோதிய)] போன்ற சம்பவங்களைக் குறிப்பிடலாம்..
7. முடிவுரை அகச்சான்றுகளுடன் சரித்திர ஆய்வும், நம்பத் தகுந்த செவிவழிக் கதைகளும் சேர்ந்தே அருணகிரியின் காலத்தையும், வாழ்க்கையையும் கணிக்க உதவுகின்றன. இது அவர் எப்படி அவர் காலத்தின் முக்கிய சமய,இலக்கியக் குரலாக ஒலித்தார் என்று நாம் அறியத் துணை புரிகின்றது.
அருணகிரியின் வாழ்க்கையில் நடந்த அற்புதச் செயல்களுக்குப் பல அகச் சான்றுகள் இருப்பினும், அவர் பாடல்களில் காணப்படும் இலக்கிய, சமய உண்மைகளும், அவருடைய உபதேசங்களும் நம் கவனத்தை அதிகமாக ஈர்க்கின்றன. முக்கியமாக, அவிரோதம், வள்ளிச் சன்மார்க்கம் போன்ற சூக்குமம் நிறைந்த உபதேசங்களும், அறம், பொருள், இன்பம், வீடு பற்றிய அவர் கருத்துகளும், சைவ-வைணவப் பாலமாய் அவர் முருகனைப் போற்றி , இந்து மதத்தின் எல்லாத் தெய்வங்களைப் பற்றியும் பாடிய சமரசப் பார்வையும் போற்றத் தக்கவை. இவற்றாலேயே, அவர் காலத்திலேயே, அவர் பாடல்கள் மிகவும் புகழ் பெற்றன. இதை அவரே சொல்கிறார்.
"பூர்வ பச்சிம தக்ஷிண உத்தர திக்குள//பக்தர்கள் அற்புதமென ஓதும் சித்ர கவித்துவ சத்தமிகுத்த திருப்புகழ்" ( பத்தர் கணப்ரிய ) "ஆபாதனேன் மிக ப்ரசித்தி பெற்று இனிது உலகேழும் யானாக நாம அற்புதத் திருப்புகழ் தேனூற ஓதி எத்திசைப் புறத்தினும் ஏடேவு ராஜதத்தினைப் பணித்ததும்" ( ஆனாத ஞான )
இவருடைய உபதேசங்களைக் கண்டு இன்னொரு சிறந்த மெய்ஞ்ஞானியாகிய தாயுமானவரே, ” ஐயா அருணகிரி அப்பா உன்னைப்போல் மெய்யாக ஓர்சொல் விளம்பினர் யார்” என்று வியந்து சொன்னார். இதனாலேயே, “கருணைக்கு அருணகிரி” என்ற வழக்கும், “ வாக்குக்கு அருணகிரி, வாழ்க்கைக்குத் திருப்புகழ்” என்ற முதுமொழியும் அருணகிரியின் திருப்புகழாதிய நவமணி நூல்கள் இக்காலத்திலும் நமக்குச் சிறந்த வழிகாட்டிகளாய்த் திகழ்வதை உறுதிசெய்கின்றன. ======= |