ஜெயகாந்தனிற்குப் பின்னர் ஜெயகாந்தன் பற்றிய பார்வை - -அருண்மொழிவர்மன்
   
   
   

ஜெயகாந்தனிற்குப் பின்னர் ஜெயகாந்தன் பற்றிய பார்வை

-அருண்மொழிவர்மன்

 

ஜெயகாந்தன் தமிழ் எழுத்தாளர்களில் பிற எவரும் பெற்றிராத அளவுக்கு பிரபல்யத்தையும், பெரும் ரசிகர் கூட்டத்தினையும் பெற்றிருந்தவர்.  படைப்பிலக்கியம் சார்ந்து மட்டுமல்லாமல் அரசியல், திரைப்படம் என்று பல்வேறு துறைகளிலும் தீவிரமாக ஈடுபட்டவர்.  வரலாற்றில் ஜெயகாந்தன் என்கிற பொருளில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள இன்றைய நிகழ்வில் பேசப்படுகின்ற விடயங்களூடாகவும் ஜெயகாந்தனின் இந்தப் பன்முக ஆளுமையை நாம் புரிந்துகொள்ளலாம்.  நான் மிகச் சிறுவனாக இருந்த காலத்திலேயே ஜெயகாந்தன் எழுதுவதை நிறுத்தியிருந்தார்.  அதன்பின்னர் அவரது மீள் பிரவேசம் நிகழ்ந்தாலும் அது தொடர்ச்சியான இயக்கமாக இருக்கவில்லை.  எனவே, எனது கட்டுரை ஜெயகாந்தன் காலத்தின் பின்னர் ஆன – குறிப்பாக ஜெயகாந்தன் எழுதிக்கொண்டிருந்த காலமும் சமூகச் சூழலும் கடந்து போய்விட்ட பின்னர் – ஜெயகாந்தன் பற்றிய பார்வையாக அமைகின்றது. 

 

இந்தப் பார்வையடன் அணுகும்போது அவரது படைப்புலகம், அதில் அவர் பேசிய விடயங்கள், அவரது அரசியல் பின்னணி உள்ளிட்ட அம்சங்களை கவனத்திற்கொண்டே எனது கட்டுரை அமைகின்றது.  இன்றுவரை ஜெயகாந்தனின் அனேக வாசகர்கள் அவர் படைப்புகளில் அவர் பேசிய எளிய மனிதர்களின் வாழ்க்கை பற்றியும் அதனை அவர் வெளிப்படுத்திய விதம், அவற்றினூடாக அவர் பேசிய அரசியல் என்பவற்றினையே அவர் பற்றிய சிலாகிப்பபாகக் கூறுவார்கள்.  அன்றைய காலப்பகுதிகள் அவரது அனேக சமகால எழுத்தாளர்களின் கதாபாத்திரங்கள் காவியத்தன்மை கொண்டவர்களாக இருந்தபோது ஜெயகாந்தன் எளிய, விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கையைப் பேசினார். இந்த விடயத்தில் அவர் ஒரு முன்னோடியும் ஆவார்.  இன்று வரை ஜெயகாந்தன் கம்யூனிஸ்ட் கட்சி சார்பான எழுத்தாளர் என்ற பார்வை நிலைபெறவும் இந்த எழுத்துகளே காரணமாகின்றன.

 

அதேநேரம் அன்றைகாலப்பகுதி திராவிட இயக்கத்தின் எழுச்சியும், அவர்களது திராவிட அடையாளங்கள் பற்றிய பேச்சுகளும் பரவலாக இருந்த காலம். பாரதிதாசன், அண்ணத்துரை போன்றவர்கள் ஆரம்பித்து கருணாநிதி உள்ளிட்ட திராவிடக் கட்சித் தலைவர்கள் அன்றைய காலத்தில் பேசிய கற்பு, ஒழுக்கம், காதல் போன்றவற்றை ஜெயகாந்தன் தொடர்சியாக இவையெல்லாம் போலியானவை என்று விமர்சித்தும் வந்தார்.  கற்பு, ஒழுக்கம், காதல் போன்றவற்றின் மீது அமைந்திருந்த புனிதத்தன்மைகள் பற்றிப் பெரியாரும் தொடர்ந்து விமர்சித்துப் பேசிவந்தபோதும் இந்திய தேசியத்தையும் ஆரிய பார்ப்பன கலாச்சாரத்தையும் தொடர்ச்சியாக எதிர்த்து வந்த பெரியார், ஜெயகாந்தனை முன்னிலைப்படுத்தியவர்களுக்கு உவப்பானவராக இருக்கவில்லை.  பார்ப்பனமும் அவர்களது பார்ப்பனக் கலாசாரமுமே மேன்மையானது என்கிற  பார்வை ஜெயகாந்தனிடம் தொடர்ச்சியாக இருந்தே வந்தது.  இதனைப் பல்வேறு உரைகளில் அவர் குறிப்பிட்டும் இருக்கின்றார். குறிப்பாக ஆனந்தவிகடனிலும், தினமணிக்கதிரிலும் அவர் எழுதிய தொடர்களில் பார்ப்பன மொழிவழக்கு, அன்று பார்ப்பனர்களிடம் பெரிதும் இருந்த ஆங்கிலம் சமஸ்கிருதமும் கலந்த   உரையாடல்கள் என்பவற்றையும், அவர் விதந்து பேசிய பார்ப்பனக் கலாசாரக் கூறுகளையும் குறிப்பிடலாம்.   அவருக்குத் திராவிடக் கட்சிகள் மீதும் திராவிட இயக்கம் மீதும் இருந்த வெறுப்புணர்விற்கும் அவர் தொடர்ச்சியாக பார்ப்பனிய கலை பண்பாட்டு அம்சங்களைப் போற்றியதற்கும் திராவிடக் கட்சிகள் பண்பாடுகள், தொன்மங்கள் பற்றிக்கொண்டிருந்ததாக கருதப்படும் தவறான அல்லது வறட்டுத்தனமான அணுகுமுறை மாத்திரம் காரணமாக முடியாது.

 

ஏனென்றால் ஜெயகாந்தன் எப்போதும் அகண்ட பாரதக் கனவுடன் கூடிய இந்திய தேசப் பெருமிதத்துடனேயே இருந்தார். குறிப்பாக ஈழத்தமிழர்களாகிய நாம் இங்கே நினைவு கூறவேண்டிய ஒரு விடயம், ஈழத்தில் பெரும் கோரங்களையும் பாலியல் வல்லுறவுகளையும் இந்திய இராணுவம் நிகழ்த்தியிருந்தது.   இதனை முற்றாக மறுத்தும் பேசி இருந்தார் ஜெயகாந்தன். எனது இந்திய ராணுவம் அவ்விதம் செய்யாது என்று நற்சான்றுப் பத்திரமும் நல்கினார்.  தனது படைப்புகளில் எளிய மக்களுக்காகப் பேசுகின்றேன் என்று முழங்கி வந்த ஜெயகாந்தன் குறைந்த பட்ச அரசியல் நுன்னுணர்வோ, அறவுணர்வோ இன்றி நின்ற தருணம் அது.  குறிப்பாக தாம் அவதானித்த சுயமரியாதையையும், செருக்கினையும் வெளிப்படுத்தும் இயல்பினை சிலாகிக்கும் அதே நேரத்தில்தான் இவற்றையெல்லாம் நாம் செய்கின்றோம் என்பது நினைவூட்டப்பட வேண்டியதே!

 

குறிப்பாக ஜெயகாந்தன் எழுச்சி பெற்ற காலப்பகுதியில் கட்டுப்பாடுகளை மீறிய விடுதலை, சுதந்திரமான மனநிலை, அவற்றின் வெளிப்பாடுகள் உலகம் முழுவதும் பல்வேறு கலைவடிவங்களிலும் வெளிப்பட்ட காலம்.  ஒரு விதத்தில் அக்காலத்திய ஹிப்பி கலாசாரம் சொன்ன விடுதலையான கலாசாரத்தை பிரதிபலித்தவராக ஜெயகாந்தன் இருந்தார்.  அதன் வழியாக அவர் “கலக மரபின்” முன்னோடியாகவும் திகழ்ந்தார்.  இன்று வரை ஜெயகாந்தன் பற்றி இருக்கக்கூடிய நாயக விம்பம் இதன் விளைவாக உருவானதே.  ஒரு விதத்தில் ஜெயகாந்தனைப் பொறுத்தவரை அவருக்கு வாசகர்கள் என்பதைவிட, அவரது “ரசிகர்கள்” பலர் இருந்தனர் என்பதே அதிகம் பொறுத்தமாக இருப்பதை (அந்த ரசிக மனோபாவம் ஊடாக) எம்மால் அறிந்துகொள்ள முடியும்.  ஜெயகாந்தனின் நிறைய வாசகர்கள் ஆரம்பகால வாசிப்புகளில் இருந்து அடுத்த கட்ட வாசிப்புக்கு நகராமல் ஜெயகாந்தனிலேயே தொடங்கி ஜெயகாந்தனிலேயே முடிந்து போனவர்களாக இருப்பதை அவதானிக்கலாம்.  அதேநேரம் இன்னொரு பிரிவினர் தமது வாசிப்புப் பழக்கம், சமூக அக்கறை காரணமாக தமது தொடர்ச்சியான தேடலின் காரணமாக ஜெயகாந்தனைத் தாண்டிச் சென்றனர்.  அவர்களது விடுதலை, பண்பாடு, தனிமனித உறவுகள் பற்றிய தொடர்ச்சியான தேடலினாலும், வாசிப்பினாலும் அவர்களுக்கு ஜெயகாந்தன் அந்நியமாகிப்போனார் அல்லது அவர்கள் அவரை விட்டு வேகமாக முன்னோக்கிப் பயணித்தனர்.  அத்தகையவர்களுக்கு அவர்களது பால்யத்தை அல்லது இளவயது நினைவுகளை மீளவும் நினைவூட்டும் ஒருவராகவே (நனவிடை தோய்தலில் ஓர் அங்கமாக) ஜெயகாந்தன் மாறிப்போனார்.  இன்று தம் இருவது வயதுகளில் இருக்கின்ற வாசகர்களுடன் உரையாடும்போது ஜெயகாந்தன் குறித்து அவர்களுக்கு அறிமுகம் அல்லது மதிப்பீடு நாம் முக்கியமாகக் கவனிக்கவேண்டியது.  அவர்களது வாசிப்புத் தேர்வுகளில் ஜெயகாந்தன் முக்கியமான ஒருவராக இல்லை என்றே சொல்லவேண்டும். 

 

ஜெயகாந்தனின் படைப்பிலக்கியம் என்று எடுத்துக் கொண்டால் அவரது படைப்புகளில் உள்ளடக்கம் சிறப்பாக இருக்கும்.  ஆரம்பகாலங்களில் அவரது கதைகள் அன்று இருந்த சமூகப் பிரச்சனைகளை முன்வைத்தமையாக இருக்கும்.  பின்னாட்களில் அவரது கதைகளின் மையம் உறவுகளுக்கு அல்லது மனிதர்களுக்கு இடையிலான பாலியல் சார்ந்த பிரச்சனைகளை மையமாகக் கொண்டு அமைந்தது.  அதற்கு அடுத்த கட்டமாக அவரது ஆன்மிகம் மற்றும் வாழ்வுமுறை சார்ந்த தேடல்கள் மற்றும் சோதனை முயற்சிகளின் தாக்கங்களையும் அவரது படைப்புகளில் காணக்கூடியதாக இருந்தது.  அவரது படைப்புகள் பெரும்பாலும் உரையாடல்களால் ஆனவை.  ஆயினும் உரையாடல்கள் ஒரு விதமாக செயற்கைத் தன்மையை நாம் உணரலாம்.  அவற்றில் ஜெயகாந்தனின் குரல் உரத்து ஒலிப்பதையும் அவதானிக்கலாம்.  ஜெயகாந்தன் தான் கொண்டிருந்த அரசியலை, தன் சமூகப் பார்வையை தன் வாசகர்களுடன் நேரடியாகப் பேச விரும்பினார்.  அதற்கான ஒரு கருவியாகவே அவர் தன் படைப்புகளைப் பயன்படுத்தினார்.  அதனால் அவர் ரசனை, வடிவம் குறித்து அவர் அதிக முக்கியத்துவம் கொடுக்கவும் இல்லை.  ஒருவிதத்தில் ஜெயகாந்தனின் கதைமாந்தர்களை ஒத்த கதை மாந்தர்களையும், களத்தினையும் கொண்டவையாகவே ஜி. நாகராஜனின் படைப்புலகமும் அமைந்திருக்கும்.  ஆனால் ஜெயகாந்தனின் படைப்புகளின் இறுதியில் நம்பிக்கை தருவனவாக, பெரும் விடியல் ஒன்றைப் பிரகடனம் செய்பவையாக இருக்கும்.  இந்த முடிவுகள் ஒருவிதத்தில் நாடகத்தன்மை வாய்ந்தனவாக இருந்தாலும் கூட எனது ஆரம்பகால வாசிப்பு அனுபவங்களில் எனக்கும் ஆதர்சமானவையாகவே இருந்தன.  எனினும் தற்போது பார்க்கின்றபோது ஜெயகாந்தன் முன்வைத்த ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை என்பது எது என்ற கேள்வி எழுகின்றது.  ஒடுக்கப்பட்ட அல்லது விளிம்புநிலை மக்களின் விடுதலை என்பதை அவர், அவர்களை மேல்நிலையாக்கம் செய்தல் என்பதாகவே புரிந்துகொண்டிருந்தார் என்றே எண்ணத் தோன்றுகின்றது.  சமூக அமைப்பில் ஒடுக்குமுறை என்பது எப்படி நுண்ணியதாக ஒரு வலையமைப்பை ஒத்து இயங்குகின்றது என்பது பற்றிய சரியான புரிதல் ஜெயகாந்தனுக்கு இருக்கவில்லை.  அவர் தனிமனிதர்களின் எதிர்ப்புகளின் ஊடாகவே சமூக விடுதலையைப் பெற்றுவிடலாம் என்ற புரிதலைக் கொண்டிருந்தார் என்றும் கருத இடம் உண்டு.  குறிப்பாக உன்னைப் போல் ஒருவன் திரைப்படத்தினை இயக்கிய ஜெயகாந்தன், அத்திரைப்பட இசையமைப்பாளர் “வீணை” சிட்டிபாபுவுடன் உன்னைப் போல் ஒருவன் படத்தின் இசையினை அதிகம் சித்தார் கொண்டு அமைத்திருந்ததாகவும், அவ்வாறான இசை “ரிச்னெஸ்” ஆக இருக்கும் என்றும் கூறியதாகவும் அதற்குத் தான், “நோ கொம்ப்ரமைஸ், கர்நாடக சங்கீதம் தான் இருக்கவேணும், நல்ல உயர்தர வாத்தியங்களில இசையமைக்கவேண்டும்.  அங்க தப்பு, டம்மு எல்லாம் அடிச்சிடக் கூடாது.  ஏனென்றால் அவர்களை elevate பண்ணிக் காட்டவேண்டும்” என்றும் குறிப்பிட்டதாகவும் பகிர்ந்திருக்கின்றார்.  ஒடுக்கப்பட்ட மக்களின் கலைவடிவங்கள் பற்றியும் அவர்களின் வாழ்வியல் பற்றியும் சரியான புரிதல்கள் இல்லாமல், அவர்களை பார்ப்பனமயப்படுத்தலின் ஊடாக அல்லது மேல்நிலையாக்கத்தின் ஊடாக அவர்களுக்கு விடுதலைக்கான மார்க்கத்தைக் காட்டலாம் என்ற ஜெயகாந்தனின் பார்வையையே இதனூடாக அறிந்துகொள்ள முடிகின்றது.

 

இந்த வாதத்தினை மேலே சொன்ன ஒற்றை நிகழ்வினை மாத்திரம் வைத்து அணுகாமல், வர்ணாசிரம தர்மம், சாதியொழிப்பு போன்றவை தொடர்பாக ஜெயகாந்தனுக்கு இருந்த மிகவும் பிற்போக்கான பார்வையுடனும் இணைத்துப் பார்க்கமுற்படுகின்றேன்.  குறிப்பாக ஒரு “சிந்தனாவாதியாக”, “ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான போராளியாக” கட்டமைக்கப்பட்ட ஜெயகாந்தன் பற்றிய விம்பத்துடன் இணைத்து அவரது அரசியல் நிலைப்பாடுகள், கருத்துகள் பற்றிப்பார்ப்பது மிகுந்த சுவாரசியமானது.

  • வர்ணாசிரம தர்மத்தை ஆதரித்ததுடன் அதை மீளக் கொணரலே எம்மை முன்னிருந்த உயர்நிலைக்குக் கொண்டுபோகும் என்றமை

  • எல்லைகளைத் தாண்டிய எழுத்துக் கலைஞனில் பெண்களின் சமூக நிலை பற்றி தெரிவித்த கருத்துகள்

  • சாதி நல்லவிடயம்.  அதைத் தவறாகப் புரிந்துகொண்டு அதனை ஒழிக்க முயலக் கூடாது என்று கூறுவதுடன் “உன்னை நம்புவதென்றால் உன் ஜாதியை நம்புவது…..” என்று தொடங்கி வழங்கிய கருத்துகள்

 

இந்த அடிப்படையில் வைத்துப் பார்க்கின்றபோது தமிழ் சமூகத்தில் சிந்தனாவாதியாக, முற்போக்கான எழுத்தாளராகப் பார்க்கப்படும் ஜெயகாந்தனின் கருத்துகள் மிக மிகப் பலவீனமான கருத்தியல் பின்புலம் கொண்டவை என்பதை இலகுவாக அறிந்துகொள்ளலாம்.  ஒரு விதத்தில் ஜெயகாந்தன் செய்தவை அபிப்பிராய உதிர்ப்புகளே (Opinion Dropping)!  இந்த வகையில் இவரது கருத்தியல் சார்ந்த வாசிப்பும், பார்வையும் கேள்விக்கு உரியதாகின்றது.  ஆயினும் அது பற்றிய எந்த சுய மதிப்பீடும் இல்லாது தொடர்ச்சியாக அனைத்து விடயங்களிலும் அவர் கருத்து உதிர்ப்புச் செய்தே வந்துள்ளார்.  உதாரணமாக Globalisation பற்றி அவரிடம் கேட்கின்றபோது globalization ஒரு நல்ல விடயம்.  Nationalization என்றால் தேச உடமையாக்கல் என்பது போலவே globalization என்கிறவாறு சொல்லுகின்றார்.  இவ்வாறு ஜெயகாந்தன் சொல்லும்போது அவருடன் உரையாடுபவர் “நீங்கள் அதன் பொசிடிவ் சைட் மட்டும் பார்க்கின்றீர்கள் என்று சொல்லத் தொடங்க இடைமறிக்கும் ஜெயகாந்தன், “positive side மட்டுமே பார்க்கவேண்டும்; I am a dreamer! என்கிறார்.  இப்படியான தான் தோன்றித்தனமான கருத்துகளை ஒரு சிந்தனாவாதியால் கூற முடியுமா?  ஒரு விதத்தில் தம்மிடம் உள்ள படைப்பாற்றலாலும் எழுத்தாளுமையாலும் மோசமான அரசியல் கருத்துகளை மக்களிடம் பரப்புவதிலும் ஜெயகாந்தன் ஒரு முன்னோடியாகிவிடுகின்றார்!

 

இந்த அறிதல்களுடனும் வாசிப்பு அனுபவங்களின் அடிப்படையிலும் ஜெயகாந்தன் பற்றிய கறாரான பார்வை ஒன்றினை எமது தலைமுறையைச் சேர்ந்த ஒருவர் முன்வைக்கும்போது வர்ணாசிரம தர்மம் பற்றிய அவரது கொள்கைகள், கருத்துகள், இந்திய தேசிய அபிமானத்தில் அவர் தெரிவித்த கருத்துகள் ஆகியன கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படவேண்டியன.  தர்க்கபூர்வமான வாதங்களும், அறிவுப்புலம் சார்ந்த வாசிப்பும், சமூகப் பார்வையும் இன்றி அவர் உதிர்த்த கருத்துகள் – opinion dropping – அவருக்கு வழங்கப்பட்ட “சிந்தனாவாதி” என்கிற அடையாளத்தையே கேள்விக்குரியதாக்குகின்றது. 

 

அவரது ஆரம்பகால படைப்பிலக்கியங்களில் இருந்த எளிய, விளிம்புநிலை மக்கள் பற்றிய சித்திகரிப்பும், பெண் கதாபாத்திரங்களின் நுட்பமான சித்திகரிப்பும் அவர்களுக்காக அவர் எழுப்பிய குரலும் முக்கியமானது; அவர்களது அன்றைய சமகாலப் பிரச்சனைகளுக்காகத் தொடர்ந்து குரல் எழுப்புபவராக அவர் இருந்தார்.  அன்றைய இலக்கிய செல்நெறியைத் தீர்மாணித்ததிலும், திசைமாற்றியதிலும், இந்த மக்களின் பிரச்சனைகளை வெகுசனப் பரப்பில் பேசப்பண்ணியதிலும் அவரது பங்கு காத்திரமானது.  ஆனந்தவிகடன் போன்ற வெகுசன பத்திரிகைகளில் அவர் எழுததொடங்கிய பின்னர் அவரது மொழி நடையிலும் வடிவத்திலும் நேர்ந்த சமரசம் அல்லது வீழ்ச்சி பற்றிய விமர்சனங்கள் இருந்தாலும், அந்த வெகுசன பத்திரிகைகளின் பரந்த வீச்சினூடாக ஜெயகாந்தனால் மக்கள் பிரச்சனைகள இன்னமும் பரந்த தளத்திற்குக் கொண்டுசெல்லக்கூடியதாக இருந்தது.  இன்று வரை ஜெயகாந்தன் நினைவுகூரப்படுவது இத்தகைய படைப்புகளுக்காகவே.   ஆயினும் அவர் எது மனிதாபிமானம் என்று உணர்ந்தாரோ அல்லது சமூகவிடுதலையை எவ்விதம் கொண்டுவரலாம் என்று கருதினாரா அந்த சமூகப் பார்வையில் இருந்து அவர்களை நோக்கினாரே, அவற்றைப் பதிவுசெய்தாரே அன்றி அவர்களின் ஆன்மாவைப் புரிந்துகொள்ளவில்லை என்றே சொல்லவேண்டும்.  குறிப்பாக சாதியமும், வர்ணாசிரம தர்மமும் மக்களை எப்படி அடிமைகளாக்கி அவர்கள் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல்  வாழக் காரணமாகின்றன என்ற புரிதல் அவருக்கு இருக்கவில்லை.  பாலியல் சார்ந்த பல்வேறு உறவுப்பிரச்சனைகளை அவரால் தனது படைப்புகளுக்கான கருவாக்க முடிந்ததே தவிர அதனை தொலைநோக்காக ஒரு பார்வையுடன் அவரால் அணுகமுடியவில்லை.  இன்றைய தலைமுறையினரைப் பொறுத்தவரை ஒருவருக்கு இலக்கிய வரலாறு சார்ந்து ஜெயகாந்தன் தேவைப்படும் அளவுக்கு, இலக்கிய வாசகர் ஒருவருக்கு ஜெயகாந்தன் முக்கியமானவராக அமையமாட்டார் என்றே கருதுகின்றேன்.  ஞானரதத்தில் வெளியான ஜெயகாந்தனின் நேர்காணல் பின்வருமாறு அமையும், 

ஜெயகாந்தன் : முடிவாக என்னைப்பற்றி, “நான் ஒரு நவீன ஹிந்து – கம்யூனிச – வைகுந்த – சுவர்க்க வாழ்க்கையை லட்சிய வாழ்க்கையாக நினைக்கிறேன்”

கேள்வி கேட்பவர்: நீங்கள் சொல்வது உங்களுக்குப் புரிந்திருக்கிறதா?

ஜெயகாந்தன் : Yes, Thank you.

இந்த முரண்தான் ஜெயகாந்தன்!