சங்கீதம் சார்ந்த சிறுகதைகள் - பேராசிரியர் சு.பசுபதி

சங்கீதம் சார்ந்த சிறுகதைகள்

பேராசிரியர் சு.பசுபதி

28-03-15

1. அறிமுகம்

தமிழில் உள்ள புனைவிலக்கியத்தைப் பல வகைகளில் பிரிக்கலாம். வரலாறு, வட்டாரக் கதைகள், அறிவியல்,  மொழிபெயர்ப்பு,  துப்பறிதல் என்று பலதுறைகளில் புனைவுலகம்  வளர்ந்துள்ளது. இவற்றைப் போலவே சங்கீதம் பற்றிய நாவல்களையும், சிறுகதைகளையும் ஆராயலாம். இந்த இசை இலக்கியத்தில் உள்ள பல நாவல்கள் இசை, தமிழ் இரண்டிலும் ஆர்வமுள்ளோர் பலருக்கும் தெரிந்திருக்கலாம்.  எடுத்துக் காட்டாக, சிதம்பர சுப்பிரமணியனின் “இதய நாதம்”, தி.ஜானகிராமனின் “மோக முள்”, கே.பி.நீலமணியின் “புல்லின் இதழ்கள்”, ரஸவாதியின் “ஆதார சுருதி”, கொத்தமங்கலம் சுப்புவின் “தில்லானா மோகனாம்பாள்”, ஜெயகாந்தனின் “பாரிஸுக்குப் போ”, சக்தி சித்தார்த்தனின் “நாத தரங்கிணி”,   போன்றநாவல்கள்  குறிப்பிடத் தக்கவை. புதினங்களும் சிறுகதைகளும் ஒருதாய் வயிற்றுச் சேய்களே; இருப்பினும் இசைப் புதினங்கள் கவனிக்கப் பட்ட அளவுக்கு சங்கீதச் சிறுகதைகள் ஆராயப் படவில்லை என்றே தோன்றுகிறது. அதன் முதல் படியாக இந்தக் கட்டுரை இன்று நம்மிடையே இல்லாத சில பிரபல எழுத்தாளர்களின் சங்கீதச் சிறுகதைகளைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம் தர முயலும். 

2. ‘ஜுகல் பந்தி’

நம்முடைய பணியைப் பெரும்பாலும் எளிதாக்குகிறது பிரபல எழுத்தாளர் எஸ். ஷங்கரநாராயண’னின் ‘ஜுகல் பந்தி’  [ வடக்கு வாசல் வெளியீடு, 2006 ] என்ற சிறுகதைத் தொகுப்பு. இது தமிழிலக்கியத்தில் ஒரு முக்கியமான முன்னோடி முயற்சி . அவர் அழகாய்ச் சொன்னதுபோல் இது  “இரண்டாம் தமிழுக்கு முதல் தமிழின் வணக்கம்”.  ஒரு பிரபல படைப்பாளியின் தேர்வு என்பதால் இந்தத் தொகுப்பு மேலும் முக்கியமாகிறது . அவருக்கு என் பாராட்டுகளும், நன்றியும். இத் தொகுப்பில் 28எழுத்தாளர்களின் சங்கீதக் கதைகள் உள்ளன. அவற்றுள் உள்ள  ஸ்வாமிநாத ஆத்ரேயன்,  கல்கி, மௌனி, கு.அழகிரிசாமி,  அனுராதா ரமணன்,  தி.ஜானகிராமன், லா.ச.ராமாமிர்தம், செ.யோகநாதன் என்ற எட்டு அமரர்களின்  சிறுகதைகளையும் ,  கூடவே, அந்தத் தொகுப்பில் இல்லாத ஐந்து அமரர்கள் ரசிகன், ஆதவன், ரா.கி.ரங்கராஜன், ய.மகாலிங்க சாஸ்திரி, கிருஷ்ணன் நம்பி ஆகியோரின் சில சங்கீதக் கதைகளையும் இக் கட்டுரையில் ஆராய்வோம் .

3. கதைக் கருவும், நடையும்

 அறிமுகம் என்ற முறையில் , இந்தப் பதின்மூவரின் படைப்புகளையும் பற்றிச் சுருக்கமாக அறிய முயல்வோம். கதைகள் பிரசுரிக்கப்பட்ட கால வரிசை தெரியாதலால், எழுத்தாளர்களில் மூத்தவரிலிருந்து தொடங்குவோம். 

ரஸிகன்’ என்ற புனைபெயரில் கதைகளை எழுதியவர் நா.ரகுநாதன் ( 1893-1982) . “பாசாங்கின் தடயம் சிறிதும் இல்லாத மொழி ரஸிகனுடையது” என்கிறார் யுவன் சந்திரசேகர். ’ஆகாசவாணி’ என்ற ‘வானொலி’  தமிழ்நாட்டில் வந்த காலத்தைப் பின்புலமாக வைத்து எழுதப் பட்ட ஒரு கதை  ரஸிகனின் “ விசித்திரவாணி”. ( பாரதமணி -1938). அவருடைய எள்ளல் கலந்த நடைக்கு ஒரு காட்டு அதிலுள்ள கீழ்க்கண்ட பத்தி.

“ ..ஸங்கீத வித்வான் ஒருவர் , “இந்த ரேடியோ இல்லேனு யார் அழுதா? பொய்யும் பித்தலாட்டமும் தவிர நிஜம் ஒரு அக்ஷரம்கூட வரதில்லை. ஸங்கீதத்தை நாசம் பண்ணறதுக்கு பாக்கி இருக்கறதெல்லாம் போராதுன்னு இது வேறு கிளம்பியிருக்கு. அம்பது, நூறு வாங்கிண்டு, அரைமணி ஒருமணி நேரத்திலே ஏதோ இங்கிலீஷ் நோட்டு மாதிரி பத்து பதினஞ்சு உருப்படி வாரியெறிஞ்சிட்டு வராளே, மகாவித்வான்களுன்னு வழங்கர ப்ரபுக்கள், இவாள்ளெல்லாம் நாத ப்ரும்ஹத்திலே லயிச்சு ஆத்மா பரவசமாகிப் பாடறாள்னு நினைக்கிறீரோ? வெறும் ப்ரமை! அவன் பாடறபோது பாட்டிலே எங்கே எண்ணமிருக்கு ? மனசிலே ஆயிரம் குரோதம் பக்கவாத்தியக்காரனிண்டே சண்டே போடறதே குறி. ஸங்கீதம் எங்கே உருப்படும்” என்று சீறினார்.

1950-களில் கல்கி, தேவன்,சாவி  போன்றோர் நகைச்சுவையால் தமிழ்ப் பத்திரிகைகளை ஆண்டுகொண்டிருந்தனர் . ய.மகாலிங்க சாஸ்திரி(1897- )  50 -களில் எழுதிய ஒரு நகைச்சுவைக் கதை “ சீதாவின் சுயம்வரம்” . (விகடன் தீபாவளி மலர் ) தன்னைப் பெண்பார்க்க வரும் ஆடவர்களின் பெயர்கள் வரும் பாடல்களைப் பாடி , பெயர்கள் வரும் இடங்களில் அழுத்தந்திருத்தமாய், அதட்டல் தொனியில் விஸ்தாரமாய் நெரவல், ஸ்வரம் பாடி அவர்களைப் பயமுறுத்தி விரட்டி அடிக்கும் சீதாவின் கதை அது.   

பேராசிரியர் கல்கி” கிருஷ்ணமூர்த்திக்கு( 1899-1954) இசையில் உள்ள ஆர்வம் யாவரும் அறிந்ததே. அவருடைய “சங்கீதப் போட்டி” என்ற கதையில் இசையும், நகைச்சுவையும் போட்டி போடும்.  ”கடிதமும் கண்ணீரும்”, தவுல் வித்வான் ஐயம்பேட்டை கந்தப்பன் சொன்ன “திருவழுந்தூர் சிவக்கொழுந்து” “ வீணை பவானி” போன்ற கதைகள் நினைவுக்கு வருகின்றன. இவற்றுள் ’கல்கி’ இதழில் வந்த ”வீணை பவானி” ‘கல்கி’யின் வழக்கமான பாணியில் ஒரு எதிர்பாராத திருப்பத்தைக் கடைசியில்  வைத்துள்ள ஓர் உருக்கமான கதை

’தமிழ்ச் சிறுகதையின் திருமூலர்’ என்று புதுமைப் பித்தனால் போற்றப்பட்ட மௌனி (1907-1985) யின் இயற்பெயர்:சுப்பிரமணியன். அவருடைய"பிரபஞ்ச கானம்" என்ற கதை. மணிக்கொடியில் 1936-இல் வந்தது.  இக்கதை இசை மையக் கதைகளின் ஆரம்பக் காலகட்டத்தில் வந்த ஒன்று என்று தோன்றுகிறது. பலவீன இதயமுள்ள ஒருத்தி பாடக்கூடாது என்கிறார் வைத்தியர். அந்த எண்ணத்தில் சஞ்சலிக்கும் ஓர் ஆடவனின் அகப்பயணத்தை விவரிக்கிறது கதை. க.நா.சு.வுக்குப் பிடித்த மௌனியின் இரு கதைகளில் இது ஒன்று.

லா.ச.ராமாமிருதம்( 1916- 2007) நனவோடை எழுத்தில் திளைத்தவர். ”ஈ ஜகமுலோ திக்கெவரெம்மா” என்ற கதை “நேசம்” கதைத்தொகுப்பில் உள்ளது. அவர் நடைக்கு அதிலிருந்து ஒரு சான்று:

“ மதுரை மணி ஐயர் ஒரு சமயம் வாத்தியத்தின் துடுக்கு அடக்கினதைப் பார்த்தது நினைப்புக்கு வந்தது. என்ன நேர்ந்தது, எப்படி எந்த லகுவில், எந்த இடத்தில் என்ன பொடி. யாருக்கும் வெளிப்படையாகத் தெரியாது. நடுவாசிப்பில், மிருதங்கக்காரன், சரணாகதியில் இரு கரங்களையும் தூக்கிக் கூப்பினதுதான் தெரியும். அப்பா! அந்தச் சமயத்தில் அந்த முகத்தில் தோன்றிய இளஞ்சிரிப்பின் கருணை, அடேப்பா! - இனம் கண்டுகொள்ளச் செய்வதில்தான் இருக்கிறது! சந்தியில் மொக்கு மோறையை உடைப்பதில் என்ன இருக்கிறது? அது போல.” 

  பிரபல இசைப்பாடலாசிரியர் தியாகராஜரின் பாடல்களின் பல வரிகள் தமிழ்நாட்டில் அவர் கண்ட, கேட்ட அனுபவங்களின் தாக்கங்களே என்பதை நாம் யூகிக்க முடிகிறது. தியாகராஜரின் பாடல்கள் எந்தெந்தச் சந்தர்ப்பங்களில் எழுந்தன என்பதைப் பற்றித் தியாகராஜரின் சீடப் பரம்பரையினரிடம் தான் கேட்ட பல உண்மைச் சம்பவங்களைக்  கதைகளாக வடித்தவர் மணிக்கொடி காலப் படைப்பாளி ஸ்வாமிநாத ஆத்ரேயன் (1919-2013). இப்படி அவர் ”சுதேசமித்திர”னில் அறுபது ஆண்டுகளுக்கு முன் எழுதிய பன்னிரண்டு கதைகள் “ஸ்ரீ தியாகராஜ அனுபவங்கள்” என்ற நூலாக வெளிவந்துள்ளது. அண்மையில் அந்தச் சிறுகதைகளைக் கோத்து, “ அனுபவ ஆராதனை” என்ற ஒரு நாடகமும் சென்னையில் அரங்கேறியுள்ளது. இதனால், இசை, இயல், நாடகம் என்று மூன்று தளங்களிலும் அவருடைய கதைகள் நின்று நிலைத்துக் காலத்தைக் கடந்தவை என்பதைக் காட்டுகின்றன.

சான்றாக, இரு கதைகள்: “ ஸரிவாரிலோன” என்ற ஸ்வாமிநாத ஆத்ரேயனின் கதை( ஜுகல் பந்தி ) , ராமர் பட்டாபிஷேகம், பூஜை  நடத்திய தியாகய்யரின் வீட்டில் விருந்துண்டவர்கள் பிறகு தன்னைப் பற்றித் தாறுமாறாகப் பேசினதால் மனம் நொந்த தியாகராஜரைப் பற்றியது. “ராமா நீயெட” என்ற கதை( தீபம் இதழ்த் தொகுப்பு )  “ பெண்வேடம் போட்டவனுக்குக் கற்பு பற்றி என்ன தெரியும்?” என்று வரும் தியாகய்யரின் வரிகளுக்குப் பின்னுள்ள சம்பவத்தைக் கதையாக்குகிறது. 

தி.ஜானகிராமன்(1921-1982) மிகச் சிறந்த எழுத்தாளர் மட்டுமல்ல, முறையாக 12ஆண்டுகள் இசையைக் கற்றுத் தேர்ந்தவர். ஆத்ரேயனுக்குப் பின் அதிகமாக இசைபற்றி எழுதியவர் இவராகத் தானிருக்கும் என்று தோன்றுகிறது. இவர் எழுதிய பல இசைக் கதைகளில் ‘நடேசண்ணா’ 'இசைப் பயிற்சி’ “செய்தி” ’ஜுகல் பந்தி’யில் உள்ள ‘பாஷாங்கராகம்’  என்பவை குறிப்பிடத் தக்கவை. அவருடைய அழகியல் கலந்த நடைக்கு உதாரணமாய் ’நடேசண்ணா’விலிருந்து ஒரு பகுதி:

நெல்லு மிஷின் தாண்டியாயிற்று. உடையார் சவுக்கைத் தோப்புத் தாண்டியாகிவிட்டது. நடேசண்ணாவின் பியாகடை ராகம் என் உடல், உள்ளமெல்லாம் ஒரு தடவை வளைவிட்டு ஓடிற்று. கண்ணை மூடி அதைப் பார்த்தேன். இந்த மூங்கில் தோப்பைப் பார்க்கும்போதெல்லாம் இன்னும் தெளிவாக நடேசண்ணாவின் பாட்டு என் காதில் விழும். எப்படி இந்த சம்பந்தம் என் மனதில் ஏற்பட்டது என்று நினைவில்லை. நடேசண்ணா பாடும்போது கையை நீட்டி வளைக்கிறாரே, இந்த மூங்கில் கொத்து, சாலையின் இக்கரையில் நின்றவாறு அக்கரையில் உள்ள வாய்க்கால் மேலும் வளைந்து நிற்பது போல, அதனாலா? இல்லை, அவர் ராகம் வீச்சும் கணுவும் வளைவுமாக மூங்கில் போல் வியாபிப்பதனாலா? மூங்கில் போல எளிய நேர்மையும் ஆடம்பரமற்ற அழகுமாக இருப்பதனாலா? . . . நடேசண்ணா ஒரு ராகத்தைப் பாட ஆரம்பித்தால், அந்த ராகம், மரியாதையாக, அழகாக, வந்து நிற்கும். குளித்துவிட்டு, தலை சீவி, மலர்சூடி, துல்லிய ஆடை உடுத்துப் பளிச்சென்று பணிவாக வந்து நிற்பதுபோல் எனக்கு ஒரு தோற்றம் வருவதுண்டு. மற்றவர்கள் அந்த ராகத்தைப் பாடும்போது அந்தப் பணிவை நான் உணர்ந்ததில்லை. பரட்டைத் தலையாகவோ, கிழிசல் துணியோடோ, உடம்பில் தூசி புழுதியோடா, அல்லது முகம் சுளித்தோ -ஏதாவது ஒரு சேஷ்டை செய்து வருவது போல்தான் எனக்குப் படுகிறது “  

“திரிவேணி” என்ற கு.அழகிரிசாமியின்( 1923-1970) கதையில் தியாகய்யரின் பாட்டைக் கேட்டு உருகி அவர் வீட்டிற்குச் சீதையுடன் வருகிறான் ராமன். “ மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே” என்ற தெருப்பாடகன் ஒருவனின் பாடலைக் கேட்டு, “தெய்வங்கள் மனிதர்கள் ஆகவேண்டும். மனிதப் பிறவிக்கு அவ்வளவு மகத்துவம் உண்டு” என்று ராமன் தனக்குத் தானே சொல்வதாக அமைத்திருப்பதும் கதைக்கு நுண்மையான அழகைக் கொடுக்கிறது . க.நா.சுப்பிரமணியம், கி.ராஜநாராயணன் போன்றோரும் இதை ஒரு சிறந்த கதையாக முன்பே குறிப்பிட்டிருக்கிறார்கள்.   

’குமுத’த்தில் பல வருடங்கள் துணை ஆசிரியராய்ப் பணி புரிந்து பல ஜனரஞ்சகக் கதைகளை எழுதிய ரா.கி.ரங்கராஜன்(1927-2012)  சங்கீதப் பின்புலத்தை வைத்துப் புனைந்த ஒரு கதை ’ வடிவேலுவின் வாத்தியம்’. அவருடைய ‘காதல் கதைகள்’ என்ற தொகுப்பில் உள்ள இக் கதை நாகசுரக் கலைஞர்களைப் பற்றியது.

கிருஷ்ணன் நம்பி( 1932-1976) எழுதிய 25கதைகளுள் ஒன்று, “மீண்டும் நீருக்குள்” (தாமரை, 1966). ஓர் எழுத்தாளனுக்கு வருகிறது ஒரு ‘சிந்தனையோட்டத்தடை’ ( Writer's Block). அப்போது தன் குழந்தையைத் தூங்கவைக்க அவன் பாடும் இசை ”மிக அருமை” என்கிறாள் மனைவி. இரண்டாம் தமிழில் பெற்ற வெற்றி முதல் தமிழில் வந்த அவனுடைய சிந்தனைத் தடையை நீக்கிவிடுகிறது. “வெற்றியைப் போல் வெல்வது வேறு ஒன்றும் இல்லை” ( Nothing succeeds like success ) என்ற சொலவடை நினைவுக்கு வருகிறது. 

செ.யோகநாதனின்(1941-2008) " காற்றும் சுழி மாறும் " என்ற கதை ( ‘கணையாழி’). சங்கீத வித்வான் மகாராஜபுரம் சந்தானம் இறந்தபின் மனம் வருந்திய ஓர் இசைக் கலைஞனின் வாழ்க்கைச் சுழல்களை விவரிக்கிறது.

’ வீணை, விரல், மனம் ‘ என்பது  ஆதவன் என்ற புனைபெயரில் எழுதிய கே.எஸ்.சுந்தரத்தின் ( 1942-1987) ஒரு சங்கீதக் கதை தன் மகளுக்கு வீணை கற்றுக் கொடுக்கும் ( மனைவிக்கும் கற்றுக் கொடுக்கப் போகும் ) வாத்தியாரைச் சற்றுப் பொறாமையுடன் பார்க்கும் ஒருவரின் மனப்போக்கை ஆதவனுக்கே உரிய தனித்தன்மையுடன் விவரிக்கும் சிறுகதை இது.

அனுராதா ரமணன்(1947-2010)வின் “ஆர்மோனியம் சிரிக்கிறது” ( ஆனந்த விகடன் )என்ற கதையில் டிசம்பர் சங்கீத சீஸனுக்காக அமெரிக்காவிலிருந்து சிலர் ஆண்டுதோறும் சென்னையில் உள்ள பெற்றோரின் வீடு தேடிப் போகும் சூழ்நிலையை யதார்த்தமாக விவரிக்கிறது. இசை நன்கு தெரிந்த, ஆனால் குடும்பத்தால் பேச்சிலும், கச்சேரிப் பயணங்களிலும் ஒதுக்கப் படுகின்ற ஒரு  தாயின் குமுறலை நன்கு வெளிபடுத்துகிறது இக்கதை. கதையில் ஒருபகுதி:

 "சாப்பாடு பரிமாறுகையில் இவர்களின் பேச்சில் கோமதி கலந்து கொள்ள வாய்ப்பே இல்லை.என்னவோஅமெரிக்காவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் கனடாவுக்கும் போய்தான் கர்நாடகச் சங்கீதப் புதையலைத் தோண்டி எடுத்தாற்போல மாய்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள். நடுவில் அந்தத் தாயின் குரல் ‘அரைகட்டை’ சுருதியில் எங்கே எடுபடும்? “

3. முடிவுரை

இந்தப் பதின்மூன்று எழுத்தாளர்களில் பெரும்பாலானோர் நல்ல இசை ஞானம் உள்ளவர்களாகவே தெரிகிறார்கள். தமிழ்நாட்டில் அக்காலத்தில் இருந்த கர்நாடக இசைக் கலைக்குக் கிடைத்த உயர்ந்த ஸ்தானமும்,  தஞ்சையிலும், சென்னையிலும் நடந்த இசைக் கச்சேரிகளும், ரசிகர்களுக்கும் வித்வான்களுக்கும் இடையே இருந்த அன்யோன்ய பாவம் கலந்த உறவும்,  இந்த எழுத்தாளர்கள்மனங்களில்எழுப்பிய பல உணர்வுகளே இக்கதைகளுக்கு ஆதாரங்களாய் இருந்திருக்கின்றன என்பது தெளிவு.  தங்கள் இசை அனுபவக் கதிர் ஓர் எழுத்துக் கண்ணாடியின் மூலம் விரியும்போது, அவரவரின் தனிப்பட்ட திறமைக்கேற்றபடி ஒவ்வொரு வண்ணத்தில் ஒளிர்வதைப் பார்க்கமுடிகிறது. எல்லாக் கதைகளும் ரசிக்கத் தன்மையுள்ளனவாக இருப்பினும், ஸ்வாமிநாத ஆத்ரேயன், கு.அழகிரிசாமி, தி.ஜானகிராமன் மூவரும் நம் மனத்தை மேலும் பண்படுத்தி, மேனோக்கிப் பார்க்கச் செய்கிறார்கள் என்று தோன்றுகிறது. அவர்களுடைய மொழிநடைகளும், அழகியல் பார்வைகளும் இதற்கு மேலும் உதவுகின்றன

சங்கீதம் சார்ந்த சிறுகதைகளில் கர்நாடக இசை பற்றிய பல அழகியல் வர்ணனைகளும்,  அந்த இசையுலகிற்கே உரித்தான சில “வட்டார வழக்குகளும்”, சொற்றொடர்களும் பரிமளிக்கக் காண்கிறோம், எழுத்தாளர்களுக்குப் பிடித்தமான வித்வான்கள், ராகங்கள் போன்றனவும் நடு நடுவே உலா வருகின்றன. இசைக் கலைஞர்களின் இழிந்த நிலை, குடும்ப்ப் பிரச்சினைகள், மன விரிசல்கள், ஏமாற்றங்கள்பற்றிய பார்வை இருக்கும் கதைகளிலும் இசையின் உன்னத பரிமாணங்கள் நம் உள்ளத்தைத் தொடுவதை உணர முடிகிறது.

முடிவில், “சொல்வனம்” என்ற மின்னிதழின் ‘இசை’ இதழில் ( டிசம்பர் 2009)  வந்த சில கேள்விகள் : “ எதற்காக இசை கேட்கிறோம்? மொழியறியாவிட்டாலும் தியாகராஜரின் உணர்ச்சிகளை நம்மால் உணர்ந்து கொள்ள முடிவதன் காரணம் என்ன? இசைக்கும் மானுட உணர்ச்சிகளுக்கும் ஆதாரமான தொடர்பு இருக்கக் கூடுமா? அதனால்தான் நமக்கு இசை அங்கெங்கினாதபடி காலை நம்மை எழுப்பும் அலாரக்கடிகாரம் முதல் செல்போன் ரிங்டோன், காரின் ரிவர்ஸ் கியர் என எல்லா இடத்திலும் தேவைப்படுகிறதா? . இசை உண்மையில் மொழியின் ஒரு வித உயர் அறிதல் வடிவமா? ” 

சங்கீதம் சார்ந்த கதைகள் நம்மை இக்கேள்விகளுக்கு விடைகளைத் தேடத் தூண்டுகின்றன. 